அமெரிக்காவில் கொரோனா தொற்று நோய் முடிவுக்கு வருவதாகத் தான் நம்புவதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
எனினும் 1 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களை கொன்ற தொற்று நோயால் ஏற்பட்ட நெருக்கடிகளை அமெரிக்கா தொடர்ந்தும் எதிர்கொண்டு வருவதாக அவர் ஒப்புக்கொண்டார்.
உலக சுகாதார அமைப்பால் பிரகடனப்படுத்தப்பட்ட கொவிட் சர்வதேச பொது சுகாதார அவசரநிலை இன்னமும் அமுலில் உள்ளது. அமெரிக்காவிலும் கொவிட் பொது சுகாதார அவசர நிலை தொடர்கிறது. எனினும் சர்வதேச சுகாதார துறைசார் வல்லுனர்கள் கொவிட் முடிவுக்கு வருவது குறித்த நம்பிக்கைகளை வெளிப்படுத்தியுள்ள நிலையிலேயே பைடனின் இவ்வாறான கருத்து அமைந்துள்ளது.
உலகம் கோவிட் -19 தொற்று நோயை வெல்லும் இலக்கை நெருங்கி வருவதாக கடந்த வாரம் கருத்து வெளியிட்ட உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், வைரஸைக் கட்டுப்படுத்த தொடர்ந்து பணியாற்றுமாறு நாடுகளை வலியுறுத்தினார்.
கொரோனாவின் முடிவுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால் இன்னும் அதற்காக போராட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அமெரிக்காவில் கொவிட் தொற்று நோய் நெருக்கடி முடிவுக்கு வருவதாகத் தான் நம்புதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளபோதும் கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் தினசரி சுமார் 65,000 புதிய கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவு காட்டுகிறது. எனினும் தொற்றாளர் தொகை அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து குறைந்து வருகின்றது .
இதேவேளை, அமெரிக்கா முழுவதும், கொவிட்-19 நோயால் தினமும் சுமார் 400 பேர் இறக்கின்றனர் எனவும் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு கூறுகின்றது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா